பீகாரின் முஜப்பர்பூரில், மூன்று வயதுச் சிறுமி சூட்கேஸில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட மர்ம முடிச்சுகளைக் பொலிஸார் அவிழ்த்துள்ளனர்.
கள்ளக்காதலனுடன் சொகுசு வாழ்க்கை வாழ, தனது பிஞ்சு மகளையே கத்தியால் அறுத்துக் கொன்ற கஜல் என்ற பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
"கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவர் மனோஜ் குமாரை ஏமாற்றிவிட்டு, கள்ளக்காதலனுடன் ரகசிய உறவு வைத்திருந்த கஜல், அவனுடன் ஓடிப்போகத் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், 'குழந்தை இருந்தால் உன்னுடன் வாழ முடியாது' என அந்த நபர் நிபந்தனை விதித்துள்ளார். காதலன் பேச்சை வேதவாக்காகக் கருதிய அந்தப் பெண், கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி, தனது 3 வயது மகள் மிஸ்டி குமாரியின் கழுத்தை கத்தியால் அறுத்துத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்துள்ளார்.
"கொலை செய்த பின்னர், ரத்தம் தோய்ந்த உடலை ஒரு சிவப்பு நிற ட்ராலி சூட்கேஸில் திணித்து வீட்டின் அருகே உள்ள புதரில் வீசியுள்ளார்.
பிரபலமான 'க்ரைம் பேட்ரோல்' (Crime Patrol) தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்து, உடலை மறைக்கும் யுக்தியைக் கற்றதாக அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளது பொலிஸாரையே அதிர வைத்துள்ளது.
வீட்டின் தரை மற்றும் மாடியில் இருந்த ரத்தக்கறைகளே கொலையாளியை அடையாளம் காட்ட முக்கியத் தடயங்களாக அமைந்துள்ளன.
அத்தை வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டுத் தலைமறைவான கஜலை, அவரது செல்போன் சிக்னலை வைத்து கள்ளக்காதலன் வீட்டிலேயே வைத்து பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்.
கள்ளக்காதலால் கண்மண் தெரியாமல் பெற்ற மகளையே பலிகொடுத்த இந்தத் தாயின் செயல், முஜப்பர்பூர் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
