ஈரானின் ஈஸ்பஹான் (Isfahan) மாகாணத்திற்கு அருகே அமெரிக்காவின் C-130 ரக வானூர்தியை தமது படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மின்னல் வேகத் தாக்குதல்கள் மற்றும் வான்வெளி அத்துமீறல்களால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் 'ஃபார்ஸ்' (Fars) செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
ஈரானின் 'ஃபராஜ் ரேஞ்சர்ஸ்' (Faraj Rangers) என்ற காவல்துறை கமாண்டோ பிரிவினரால் இந்த அமெரிக்க வானூர்தி தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.
மாயமான அமெரிக்க விமானப்படை வீரரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஏனைய போர் விமானங்களுக்கு, இந்த C-130 வானூர்தி வான்பரப்பில் வைத்து எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்ததாக (Refuelling) ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
ஈரானின் புனித மண்ணை ஆக்கிரமிக்க முயற்சிப்பவர்களுக்குத் துணை நின்ற காரணத்தினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஒரு F-15E போர் வானூர்தி வீழ்த்தப்பட்டு, அதன் ஒரு விமானி மீட்கப்பட்ட நிலையில், மற்றுமொரு வீரரைத் தேடும் பணியின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இருப்பினும், இந்த C-130 விமானம் வீழ்த்தப்பட்டமை குறித்து அமெரிக்கத் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வழங்கப்படவில்லை.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் ஒரு முழு அளவிலான போருக்கான அறிகுறியாகப் பார்க்கப்படுவதால் சர்வதேச சமூகம் பெரும் அச்சமடைந்துள்ளது.
