சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரித்து வருவதைக் கருத்திற் கொண்டு, உள்நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களைத் தீர்மானிப்பதற்கான புதிய பொறிமுறை ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதியமைச்சின் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ இது தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விலை தற்போது 20% முதல் 35% வரை அதிகரித்துள்ளது. இத்தகைய பாரிய மற்றும் கட்டுப்பாடற்ற விலை உயர்வுகளை முந்தைய முறையின் கீழ் கையாள்வது நடைமுறைச் சாத்தியமற்றது என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச சந்தையின் யதார்த்தங்களை உள்நாட்டு பொருளாதார நிலைமைகளுடன் இணைக்கும் வகையில் இந்தப் புதிய முறைமை அமையும். புதிய விலை நிர்ணய முறையினால் குறைந்த வருமானம் பெறுபவர்கள் பாதிக்கப்படுவதை ஆகக்குறைந்த மட்டத்தில் வைத்திருக்க விசேட கவனம் செலுத்தப்படும்.
உலகளாவிய விலை மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டு மின்சாரம் மற்றும் எரிபொருள் கட்டணங்களைச் சீரமைக்க முறையான கட்டமைப்பு உருவாக்கப்படும்.
முன்மொழியப்பட்டுள்ள இந்தப் புதிய விலை நிர்ணய பொறிமுறை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தப்படவுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார முகாமைத்துவ நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாக இது முன்னெடுக்கப்படவுள்ளது. உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய அழுத்தங்களைக் குறைப்பதே அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையின் பிரதான நோக்காகும்
