சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கான இழப்பீடுகளை வழங்கும் செயல்முறையானது, விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
பயிர்ச் சேதங்கள் குறித்த விபரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விவசாயிகள் தங்களது பாதிப்புகள் குறித்த விபரங்களை உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க முடியும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பெய்த கடும் மழை காரணமாகப் பல விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கமைய, காப்புறுதிச் சபை மற்றும் ஏனைய திணைக்களங்கள் ஊடாக இரண்டு வாரங்களுக்குள் பாதிக்கப்பட்ட அனைத்துப் பயிர்ச்செய்கை விபரங்களையும் அறிக்கைப்படுத்துமாறு நாம் பணிப்புரை விடுத்துள்ளோம். இதற்கான களப்பணிகளில் எமது அதிகாரிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட வயல் நிலங்கள் மற்றும் விவசாயிகளின் விபரங்கள் முழுமையாகக் கிடைத்தவுடன், விவசாயக் காப்புறுதிச் சபை ஊடாக மிகக் குறுகிய காலத்திற்குள் விவசாய மக்களுக்கு இழப்பீடுகளை வழங்கி முடிக்க நடவடிக்கை எடுப்போம். எனவே, தங்களது விவசாய நிலங்கள் சேதமடைந்திருப்பின், அது குறித்த விபரங்களை உடனடியாக எமது அதிகாரிகள் ஊடாக எமக்குக் கிடைக்கச் செய்யுமாறு விவசாயிகளிடம் கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்கஆரச்சி கருத்து தெரிவிக்கையில், கிடைக்கப்பெறும் விபரங்களின் அடிப்படையில் விரைவாக இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
விவசாயிகளால் வழங்கப்படும் தகவல்களின் அடிப்படையில் அதிகாரிகள் சேதமடைந்த பயிர் நிலங்களை நேரில் சென்று பார்வையிடுவார்கள் என்றும், பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தின் அளவிற்கு ஏற்ப இழப்பீட்டுத் தொகை தீர்மானிக்கப்பட்டு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
