அநுராதபுரம் மாவட்டத்தில் திருப்பனை பிரதேசத்தில் தாயை கொடூரமாக கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பனை நகர எல்லையில் உள்ள அதுங்கம சந்திக்கு அருகில் வசித்து வந்த 65 வயதுடைய தாயைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 32 வயதுடைய இளைய மகளும், அவரின் காதலன் எனக்கூறப்படும் 25 வயதுடைய இளைஞனும் நேற்று முன்தினம் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது சந்தேக நபர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் தொழிலின் மூலம் சம்பளமாக பணம் மற்றும் தங்க நகைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் பத்மலதா என்ற இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த தாயின் இளைய மகளும், அவரது காதலனும் திருப்பனை அதுங்கம வீதியிலுள்ள வீடொன்றில் குறுகிய காலம் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இவர்களுக்குள் ஏற்பட்ட பணத்தகராறு காரணமாகவே இந்தக்கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த தாய் சுமார் 24 வருடங்களாக வெளிநாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்துள்ளார். அவர் வெளிநாட்டில் பணிபுரிந்த காலத்தில், தனது இளைய மகளுக்கு திருமணமாகிய பின்னர் அவரையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அதற்கமைய, மகளும் சுமார் 14 வருடங்கள் வெளிநாட்டில் வசித்துள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர். இவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில், மகளின் திருமண வாழ்க்கை தோல்வியடைந்தது.
