நாட்டின் இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற கொடூரமான தாக்குதல் சம்பவங்களில் இருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
அவிசாவளை பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் 62 வயதுடைய நபர் ஒருவர் நேற்று முன்தினம் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த அவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவருக்கும் மற்றொருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்துள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக கொஸ்கம பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, மாத்தளை, கட்டுதெனிய பகுதியில் 53 வயதுடைய நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு, காவலாளி ஒருவருடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட மோதல் இவ்வாறு கொலையில் முடிந்துள்ளது.
மதுபோதையில் ஏற்பட்ட தர்க்கம் காரணமாக, ஆத்திரமடைந்த காவலாளி கூர்மையான ஆயுதத்தால் மேற்படி நபரைத் தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 77 வயதுடைய முதியவரான காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இரண்டு கொலைச் சம்பவங்கள் குறித்தும் அந்தந்தப் பகுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
