இலங்கையில் பதின்ம வயதுக் கர்ப்பங்கள் (Teenage Pregnancies) அதிகரித்து வருகின்றமை தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை காவல்துறை, பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவசரக் கோரிக்கை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குடும்பங்களுக்குள் ஏற்படும் பரஸ்பர பாசப்பிணைப்புக் குறைபாடே, இளம் சிறுமிகள் இவ்வாறான துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுப்பதற்குக் பிரதான சமூகவியல் காரணியாகக் காணப்படுவதாக காவல்துறையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அன்றாட நடவடிக்கைகள் மற்றும் உணர்வுப்பூர்வமான தேவைகள் குறித்து போதிய கவனம் செலுத்தாத போது, அவர்கள் வெளியில் இருந்து அன்பையும் அரவணைப்பையும் தேடிச் செல்வதாகக் காவல் நிலையங்களுக்குக் கிடைக்கும் புகார்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறான சட்டவிரோத மற்றும் முதிர்ச்சியற்ற கர்ப்பங்கள் காரணமாக, பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதுடன் அவர்களின் எதிர்காலக் கனவுகளும் சீர்குலைவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.
அத்துடன் பிள்ளைகளுடன் திறந்த மனதுடன் பேசி, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பகிர்ந்துகொள்ள பாதுகாப்பான சூழலை உருவாக்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளின் தொலைபேசி மற்றும் சமூக ஊடகப் பயன்பாடுகளைக் கண்காணிப்பதோடு, அவர்களின் திடீர் நடத்தை மாற்றங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமாகும் அந்நியர்களை நம்ப வேண்டாம் எனவும் தனிப்பட்ட தகவல்களையோ அல்லது புகைப்படங்களையோ பகிரக் கூடாது எனவும் சிறுமிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் அச்சுறுத்தல்கள் அல்லது சிக்கல்கள் ஏற்பட்டால், அதனை மறைக்காமல் உடனடியாக பெற்றோர் அல்லது ஆசிரியர்களிடம் தெரியப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
துஷ்பிரயோகங்கள் அல்லது பாதிப்புகள் ஏதேனும் ஏற்படின், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது 119, 118, 109, 107 ஆகிய அவசர உதவி எண்களுக்கோ தொடர்பு கொள்ளுமாறு இலங்கை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
.jpeg)