ஹட்டன் - டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்வடைந்துள்ளது என ஹட்டன் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த புதன்கிழமை, டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று, டிக்கோயா பட்டல்கல பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த சுமார் 34 பேர், உடனடியாக அருகிலுள்ள கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக, இந்த விபத்தில் பலத்த காயமடைந்திருந்த அக்கரப்பத்தனை, வெவர்லி பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். இந்த நிலையில், விபத்தில் காயமடைந்து மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த டிக்கோயா தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 66 வயதுடைய பழனி லூகாஸ் என்பவர், சிகிச்சை பலனின்றி நேற்று (02) உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைய, குறித்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது இரண்டாக உயர்வடைந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்து டிக்கோயா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பேருந்தின் சாரதி, நேற்று (02) வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய பின்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, விபத்துக்குள்ளான பேருந்தின் தரத்தைப் பரிசோதனை செய்த நுவரெலியா மாவட்ட பிரதம மோட்டார் வாகனப் பரிசோதகர் ஜாலிய பண்டார, குறித்த பேருந்தில் எந்தவிதமான இயந்திரக் கோளாறுகளும் இல்லை என்றும், சாரதியின் கவனக்குறைவான மந்தகதியற்ற வாகனம் செலுத்துதலே விபத்துக்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
