தமிழக முதலமைச்சர் விஜய் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும் என்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோரிக்கை விடுத்துள்ளார்
தமிழ்நாட்டிற்கு விஜயம் செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இன்று (16) தலைமை செயலகத்தில் அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்த பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராமநாதன் அர்ச்சுனா, தமிழக முதலமைச்சர் விஜய்யை சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை.
விஜய் முதல் அமைச்சராக பொறுப்பேற்கும் தருணத்தை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால், அன்றைய தினம் நான் இலங்கையின் நாடாளுமன்றத்தில் இருந்ததால் அதனைப் பார்க்க முடியவில்லை.
தமிழ்நாட்டு மக்கள் வரலாறு காணாத மாற்றத்திற்காக வாக்களித்து இருக்கிறார்கள். இப்படி ஒரு மாற்றம் நடக்காது என்று பெரிய அரசியல் விற்பன்னர்கள் கூறினார்கள். ஆனால் நடக்கும் என்றே கூறிவந்தேன்.
எங்கள் இனம் அழியும் போது திமுக, அதிமுக அரசுகள் வேடிக்கை பார்த்தன. ஆனால் தற்போதைய முதலைமைச்சர் மற்றும் பலர் அந்த நேரத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தனர்.
இனிமேலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக விஜய் பேச வேண்டும். விஜய் சேவை தமிழ் பேசும் எல்லோருக்கும் தேவை. தமிழக மக்கள் மிகப்பெரிய மாற்றத்திற்கு வாக்களித்து இருக்கிறார்கள்.
தமிழ் மக்களின் வலிகளை வைத்து வாக்கு வாங்க மட்டுமே நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஈழத்தமிழர் பிரச்சினையை பற்றி பேசினார். விஜயின் சேவை தமிழ் பேசும் எல்லோருக்கும் தேவை. தமிழக மக்கள் மிகப்பெரிய மாற்றத்திற்கு வாக்களித்து இருக்கிறார்கள்“ என தெரிவித்தார்.
