எரிபொருள் விலை உயர்த்தப்பட்டாலும் உணவு விலைகளில் மாற்றம் ஏற்படாது என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், எரிவாயு விலை உயர்ந்தால், உணவு விலைகள் குறித்து மீண்டும் விவாதிக்க வேண்டியிருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.எரிபொருள் விலை ரூ. 12 முதல் 15 ரூபாய் வரையில் சிறியளவில் அதிகரித்துள்ளது. எனவே, உணவு மற்றும் குளிர்பானங்களின் விலையை உயர்த்த முடியாது. உண்மையில், இதனை ஒரு செலவாக கருத முடியாது. எனவே, பொருட்களின் விலையில் எந்த உயர்வும் இருக்காது.எனவே உணவக உரிமையாளர்கள் உணவுப்பொருட்களின் விலையை உயர்த்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக விலைக்கு உணவு விற்கும் உணவகங்களில் நுகர்வோர் விவகார ஆணையம் சோதனை நடத்தி, அவர்களுக்குத் தேவையான தண்டனையை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
கடந்த முறை உணவுப்பொருட்களின் விலை உயர்த்தப்பட்டபோது, ஒரு முட்டையின் விலை ரூ. 42 ஆக இருந்தது. இப்போது ஒரு முட்டையின் விலை சுமார் ரூ. 26 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை முன்பு ரூ. 1450 ஆக இருந்தது, இப்போது ரூ. 1250 முதல் ரூ. 1350 வரை குறைந்துள்ளது.எனவே, உணவுப்பொருட்களின் விலையில் எந்த உயர்வும் இருக்காது என்று நுகர்வோருக்கு தெரிவிக்கின்றோம். இருப்பினும், எரிவாயு விலை அதிகரித்தால், அது குறித்து விவாதித்து, உணவுப்பொருட்களின் விலையை உயர்த்துவதா அல்லது குறைப்பதா என்று முடிவு செய்ய வேண்டியிருக்கும்.
