யாழ்ப்பாணத்தில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்த தனது 10 அடி உயரப் பதாகையை, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நேரில் வந்து கிழித்து, தனது காரில் எடுத்துச் சென்றுள்ள சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபை நாகரிகமின்றியும், தகாத வார்த்தைகளைப் பிரயோகித்தும் கூட்டங்களைக் குழப்பி வருகின்றார் என்று பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, நேற்று நடைபெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் அவர் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திச் செயற்பட்ட காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி, மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தன.
இவ்வாறான பின்னணியில், யாழ்ப்பாணம் நகரை அண்டிய பிரதான வீதியொன்றில் அர்ச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகையொன்று யாரோ சிலரால் வைக்கப்பட்டு, அதற்குச் செருப்பு மாலையும் அணிவிக்கப்பட்டிருந்தது.
இன்று காலை 10 மணியளவில் பதாகை வைக்கப்பட்டிருந்த இடத்துக்குத் தனது காரில் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், காரை நிறுத்திவிட்டு இறங்கி, அங்கிருந்த தனது பதாகையைக் கிழித்தெறிந்து, அதனைத் தனது காரிலேயே ஏற்றி எடுத்துச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
