கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீர் ஏந்திச் செல்லும் ஆகுரோயா ஆற்றில் நீராடச் சென்ற நிலையில் காணாமல்போயிருந்த பாடசாலை மாணவனின் சடலம், இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது என்று லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில், பாடசாலையில் நடைபெற்ற பரீட்சையை எழுதி முடித்த 10 மாணவர்கள், ஓல்ரிம் பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்த ஆகுரோயா ஆற்றில் அவர்கள் நீராடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் சிக்கிய மாணவன் ஒருவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். ஏனைய ஒன்பது மாணவர்களும் பாதுகாப்பாகக் கரை திரும்பியுள்ளனர்.
சம்பவத்தையடுத்த தேடுதல் பணிகள் நேற்று மாலை வெளிச்சமின்மை காரணமாக இடைநிறுத்தப்பட்டன. இன்று இரண்டாவது நாளாக, நுவரெலியா பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர், உள்ளூர் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் பயனாக மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இவ்வாறு உயிரிழந்தவர், லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மிளகுசேனை தோட்டத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலத்தைப் பார்வையிட்ட லிந்துலை திடீர் மரண விசாரணை அதிகாரி, பிரேத பரிசோதனைக்காகச் சடலத்தை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
