2029 இல் நாமலின் ஆட்சி உறுதி: முழக்கமிட்ட பொதுஜன பெரமுன


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய அரசின் நிர்வாகச் சீர்கேடுகளை விமர்சித்ததுடன், 2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,

"கிராமப்புறங்களில் மக்கள் பெரும் ஆதரவைத் தந்து வருகின்றனர். வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என அனைவருமே எமது மக்கள் தான். தற்போதைய அரசு பெரும் வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்தாலும், எதனையும் நிறைவேற்றவில்லை. வேலைவாய்ப்பின்மை, வரியதிகரிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அல்லல்படுகின்றனர். வெறுப்பு அரசியலை விடுத்து, அபிவிருத்தி மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தலைமுறை அரசியலை உருவாக்க நாங்கள் தயாராகவுள்ளோம்." - என்றார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன கருத்துத் தெரிவிக்கையில்,

"அரசு ஆட்சிக்கு வந்து மூன்றில் ஒரு பங்கு காலம் கடந்தும், கோட்டே தொகுதியில் எந்தவொரு உருப்படியான அபிவிருத்தியும் நடக்கவில்லை. சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளின் மரணத்துக்கு  இந்த அரசே பொறுப்பேற்க வேண்டும். பொறுப்பான அமைச்சர் தனது கடமையை முறையாகச் செய்யவில்லை. 2029 இல் நாட்டின் எதிர்காலத்தை நாமல் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்க நாம் இன்று முதலே தயாராக வேண்டும்." - என்றார்.

இறுதியாக உரையாற்றிய யூ.கே. சுமித் உடுகும்பர,

"நாட்டின் ஒவ்வொரு துறை சார்ந்து நாடாளுமன்றத்தில் தெளிவான புரிதலுடன் பேசும் நாமல் ராஜபக்ஷவே நாட்டின் எதிர்காலத் தலைவர் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். 2029 இல் அவர் ஜனாதிபதியாவது உறுதி. கோட்டே தொகுதியில் மிலிந்த ராஜபக்ஷவின் வலுவான தலைமைத்துவத்துடன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நாம் ஒன்றிணைந்துள்ளோம்" என்று நம்பிக்கை வெளியிட்டார்.