21 வயது இளம் தாய்க்கு பாலியல் துன்புறுத்தல்: நகர சபை உறுப்பினர் சிக்கினார்

 

ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்த 21 வயதுடைய இளம் தாய் ஒருவருக்குப் பாலியல் துன்புறுத்தல் இழைத்த குற்றச்சாட்டில், ஐக்கிய மக்கள் சக்தியின் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

50 வயதுடைய மேற்படி நகர சபை உறுப்பினரின் ஹோட்டலில், அந்த இளம் தாய் சுத்திகரிப்புப் பணியாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

கணவரைப் பிரிந்து வாழும் ஒரு குழந்தைக்குத் தாயான மேற்படி பெண், தனது வாழ்வாதாரத்துக்காக மாத சம்பள அடிப்படையில் அந்தக்  ஹோட்டலில் பணியில் இணைந்துள்ளார்.

ஹோட்டல் உரிமையாளரான நகர சபை உறுப்பினர், உரிய நேரத்தில் சம்பளம் வழங்காதமையால் அந்தப் பெண் பணிக்குச் செல்வதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில், வழங்கப்படாத சம்பளத்தைத் தருவதாகக் கூறி அவரை மீண்டும் வேலைக்கு வருமாறு மேற்படி  உறுப்பினர் தொலைபேசியில் அழைத்துள்ளார்.

இதன்படி நேற்று காலை ஹோட்டலுக்குச் சென்று அறைகளைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, கதவைப் பூட்டிக்கொண்டு வேலை செய்த பெண்ணின் அறைக்குள், மற்றுமொரு சாவியைப் பயன்படுத்தி உள்நுழைந்த நகர சபை உறுப்பினர், அந்தப் பெண்ணைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றுள்ளார். தன்னுயிரைக் காத்துக்கொள்ளப் போராடிய அந்தப் பெண், அவரிடமிருந்து விடுபட்டு அறைக்கு வெளியே தப்பி வந்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், மேற்படி நகர சபை உறுப்பினரைக் காத்தான்குடி பொலிஸார் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நகர சபை உறுப்பினரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.