21 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் 6 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு காலப்பகுதியில், 21 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மற்றும் அவற்றை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இவருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
வழக்கு விசாரணைகளின்போது, சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டவாதிகளான ஆறுமுகம் தனுஷன் மற்றும் கா.நசிகேதன் ஆகியோர் முன்னிலையாகி, குறித்த குற்றச்செயலின் தீவிரத்தன்மையை விளக்கி குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலுவான வாதங்களை முன்வைத்தனர்.
மறுபுறம், குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, குற்றவாளியின் தரப்பை முன்வைத்து ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை வழங்குமாறு மன்றில் கோரிக்கை விடுத்தார்.
இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த மேல் நீதிமன்ற நீதிபதி, போலி நாணயத்தாள் புழக்க முயற்சி என்பது ஒரு தனிநபருக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல, அது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரக் கட்டமைப்புக்கு இழைக்கப்பட்ட பாரதூரமான துரோகம் எனக் குறிப்பிட்டார்.
இதன் விளைவாக, பிரதிவாதித் தரப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்திற்கொண்டு, குற்றவாளிக்கு 6 வருட கால கடூழியச் சிறைத்தண்டனையை விதிப்பதாகத் தீர்ப்பளித்தார்.
.jpg)