பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் போதைப்பொருள் தடுப்புச் சோதனையின்போது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இந்தப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரை, சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட பொலிஸ் அதிகாரிகள் முயன்றுள்ளனர். இதன்போது, சந்தேகநபர்களில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு பொலிஸ் அதிகாரியைத் தாக்க முற்பட்டுள்ளார்.
இதனையடுத்து, தற்காப்புக்காகவும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவும் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான சந்தேகநபர் காயமடைந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது, அதே இருசக்கர வாகனத்தில் பயணித்த மற்றுமொரு நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவரைக் கைது செய்வதற்கான விசேட தேடுதல் நடவடிக்கைகளைப் பிலியந்தலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
