சீனாவில் காதலில் தோல்வியடைந்த பெண்களை இலக்காகக் கொண்டு, பிரிந்த காதலர்களை மீண்டும் சேர்த்து வைப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கான யுவான்களைப் பறிக்கும் ஓன்லைன் சேவைகள் அதிகரித்து வருவதாகச் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
'உறவியல் வல்லுநர்கள்' (Relationship coaches) எனத் தங்களை அழைத்துக்கொள்பவர்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் மன உளைச்சலைப் பயன்படுத்தி இத்தகைய பயிற்சிகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரிந்த காதலனை மீட்டெடுப்பதற்கான முதல் விதியாக, 21 நாட்களுக்கு அவனுடன் எந்தவொரு தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
தோற்றத்தை மாற்றுவது, உரையாடல் நுட்பங்களைக் கற்றுக்கொடுப்பது மற்றும் சமூக வலைதளங்களில் தங்களது முன்னேற்றத்தைக் காட்டுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு, 90% வெற்றி நிச்சயம் என உறுதியளித்து ஆயிரக்கணக்கான யுவான்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன.
இத்தகைய ஆலோசனைகளைப் பின்பற்றிய பின்னரும், முன்னாள் காதலர்கள் தங்களை நிரந்தரமாகத் துண்டித்துக்கொண்டதாகப் (Block) பல பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதில் தோல்வியடையும் பட்சத்தில், உயர்நிலை நிபுணர்களைக் கொண்டு பயிற்சி அளிப்பதாகக் கூறி மீண்டும் அதிக அளவில் பணம் பறிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சீனாவில் இது போன்ற உளவியல் ஆலோசனை நிறுவனங்களின் எண்ணிக்கை 2016-ஆம் ஆண்டில் 18,000 ஆக இருந்த நிலையில், தற்போது 1,60,000 ஆகக் கணிசமாக அதிகரித்துள்ளது.
இருப்பினும், பயனர்கள் குறைதீர்க்கும் தளங்களில் இத்தகைய போலி ஆலோசனைகள் குறித்து ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் குவிந்து வருகின்றன.
இது, இந்த துறைக்கான முறையான ஒழுங்குமுறைகள் மற்றும் சட்டதிட்டங்கள் இல்லாமையை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
