யாழ்ப்பாணம், பணடத்தரிப்பு பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர் பொலிசாரை தாக்கி விட்டு தப்பிச்செல்ல முயன்ற நிலையில் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இரண்டு இளைஞர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.
நேற்று (27) பண்டத்தரிப்பு நகரத்தில் இந்த சம்பவம் நடந்தது.
வீதிப்போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இளவாலை பொலிசார், ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் வருவதை அவதானித்து, அவர்களை வழிமறித்தனர்.
எனினும், இளைஞர்கள் பொலிசாரிடமிருந்து தப்பிச்செல்ல முயன்றனர்.
பொலிசார் அவர்களை விரட்டிச்சென்று வழிமறித்த போது, இரண்டு இளைஞர்கள் தப்பியோடினர். ஒருவர் அகப்பட்டார்.
சிக்கிய இளைஞன், பொலிசாருடன் தகராற்றில் ஈடுபட்டு, அவர்களை தாக்க முயற்சித்தார். அந்த இளைஞனை பொலிசார் கைது செய்து, தமது வாகனத்தில் ஏற்ற முயன்ற போது, இளைஞன் பெரும் ரகளையில் ஈடுபட்டு, வாகனத்தில் ஏறாமல் அடம்பிடித்தார். மதுபோதையில் இளைஞன் செய்த ரகளையால் சுமார் 30 நிமிடங்கள் அங்கு பரபரப்பான நிலைமை நீடித்தது.
பின்னர் ஒருவழியாக இளைஞனை கைது செய்து, மருத்துவ பரிசோதனைக்குட்படுத்திய போது, அவர் நிறை போதையில் இருந்தது தெரியவந்தது.
அவர் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
மதுபோதையில் வாகனம் ஓட்டுவது உங்கள் உயிரையும், பிறரின் உயிரையும் ஆபத்தில் ஆழ்த்தும். காவல்துறையினரின் கடமையில் இடையூறு விளைவிப்பதும், அவர்களை தாக்குவதும் கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். பொறுப்புடன் நடந்து, சாலை விதிகளை மதித்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வோம்.
