கொழும்பு மாவட்டம், ஹோமாகம - கட்டுவான தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தித் தொழிற்சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, அந்தத் தொழிற்சாலையிலிருந்து ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஏற்பட்ட இந்தத் தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை மண்டலம் பரவியது என்று பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்புப் பிரிவினர் உடனடியாக வரவழைக்கப்பட்டுத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அவசரகால மீட்புக் குழுக்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டன.
இந்தத் தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எவ்வாறாயினும், உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதுடன், சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்களைக் கண்டறிவதற்காகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
