சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இப்படியொரு பயங்கரம் நடந்துள்ளது.. தனியாக வசித்து வந்துள்ளனர் இந்த முதிய தம்பதியினர்.. இவர்கள் வீட்டுக்கு யார் யார் எப்போது வருகிறார்கள், செல்கிறார்கள் என்பதையெல்லாம் மர்ம கும்பல் ஒன்று நோட்டமிட்டே வந்துள்ளது.. பிறகு 1 பவுன் தங்க நகைக்காக இந்த காரியத்தை செய்து தப்பியிருக்கிறது. போலீசாரும் இச்சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி தாலுகா, குண்டுக்கல் கிராமம் ராமப்பக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன்.. 85 வயதாகிறது.. முடி திருத்தும் தொழிலாளியான இவர், தென்னைமட்டை பின்னும் தொழிலையும் செய்து வந்துள்ளார். இவரது மனைவி அமராவதி.. 70 வயதாகிறது..
இந்த வயதான தம்பதியினர் அந்த பகுதியில் உள்ள சாலையோர கூரை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி காருவள்ளியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நேற்றிரவு வழக்கம்போல தம்பதியினர் இருவர்களும் தங்கள் கூரை வீட்டில் இருந்துள்ளனர்., வயதான தம்பதி தனியாக வசிப்பதை முன்கூட்டியே நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர், யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக வீட்டிற்குள் புகுந்துள்ளனர். தம்பதி இருவரையும் கட்டையால் சரமாரியாக அடித்துத் தாக்கியுள்ளார்கள்.. இதில் பலத்த காயமடைந்த ஜெயராமன் கட்டிலிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். அமராவதியே வீட்டின் வாசற்படி அருகிலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே தாத்தா-பாட்டிக்கு சாப்பாடு கொடுப்பதற்காக அவர்களது பேரன் நவனீதன் அங்கே சென்றுள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது, தாத்தா, பாட்டி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதை கண்டு அலறினான்.. அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அதற்கு பிறகே இது குறித்து தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த தீவட்டிப்பட்டி போலீசாரின், முதிய தம்பதி இருவரின் உடல்களையும் மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காபக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு சம்பவ இடத்திற்குச் சேலம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ் ஹடிமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) குத்தாலிங்கம் மற்றும் ஐ.ஜி ஆகியோர் நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்கள் த தடயங்களைச் சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, கொலையாளிகள் தப்பிச் சென்ற பாதையைக் கண்டறியச் சோதனை நடத்தப்பட்டது.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அமராவதி காதில் அணிந்திருந்த கம்மல், தோடு மற்றும் மூக்குத்தி என மொத்தம் 1 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. வெறும் ஒரு பவுன் நகைக்காகத்தான் இந்த கொலை நடந்ததா? அல்லது சொத்து தகராறு காரணமாக யாராவது ஆட்களை வைத்து இந்தக் கொடூரத்தைச் செய்தார்களா? எனப் பல கோணங்களில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது, குற்றவாளிகளைச் சீக்கிரமாகப் பிடிக்க அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
சேலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பும், இதேபோலவே, முதிய த்ம்பதி கொல்லப்பட்டார்கள். சூரமங்கலம் ஜாகிர்அம்மாபாளையத்தில் மளிகைக்கடை உரிமையாளரான பாஸ்கரன் (65) மற்றும் அவரது மனைவி வித்யா (60) ஆகியோர் மர்ம நபர் தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதற்காகவே 4 தனிப்படை போலீசார் இதுகுறித்த விசாரணையில் இறங்கினார்கள்.. சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட மோப்ப நாய், கொலை நடந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்று மோப்ப நாய் நின்றது..
அந்த வீடு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் சவுத்ரி (32) என்ற வடமாநில தொழிலாளியுடையதாகும்.. உடனே சவுத்ரியை பிடித்து போலீசார் விசாரித்தபோது, 10.5 சவரன் தங்க நகைகளுக்காக தம்பதி இருவரையும் சுத்தியலால் தலையில் அடித்து கொடூரமாக கொன்றதை ஒப்புக் கொண்டார், பிறகு அவரிடமிருந்து 10.5 சவரன் நகைகளைப் பறிமுதல் செய்த சூரமங்கலம் போலீசார் அவரைக் கைது செய்து ஜெயிலில் அடைத்தது நினைவிருக்கலாம்.
இப்போதும் அதுபோலவே ஒரு கொடூர கொலை நடந்துள்ளது.. வெறும் கம்மல் மற்றும் மூக்குத்திக்காக, சொந்த வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியை அடித்துத் தூக்கிய இந்தச் சம்பவம், அந்த பகுதி மக்களை அதிர்ச்சியிலும் பீதியிலும் ஆழ்த்தியுள்ளது...!!!
