இலங்கையில் அரசியல் பழிவாங்கல் தற்போது தீவிரமடைந்துள்ளது என்றும், இதனைத் தடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவென்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
குருநாகலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் சிவில் அமைப்பினர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஆட்சியாளர்கள் விரோதிகளாகவே கருதுகின்றனர் என்றும் தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டினார்.
மேலும், அரச நிதி மோசடி சட்டம், அரசியல் மற்றும் சிவில் உரிமை சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகிய மூன்றையும் பயன்படுத்தி அரசியல் எதிர்ப்பாளர்களை அரசு இலக்கு வைக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆளும் தரப்பினர் மேற்கொள்ளும் ஊழல், மோசடிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், நிலக்கரி மோசடி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.
இது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழு, ஆளும் தரப்பினரைப் பாதுகாப்பதற்கான ஒரு கருவியாகவே செயற்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா முன்பே குறிப்பிட்டுள்ளமை, சுயாதீன நீதித்துறையின் கௌரவத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
"பேச்சு சுதந்திரத்தை முடக்கி, சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்க அரசு முயற்சிக்கின்றது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது மக்கள் பிரதிநிதிகளான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தலையாய கடமையாகும். எனவே, அரசின் இந்த அடக்குமுறைப் போக்குக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் ஓரணியில் திரள வேண்டும்." - என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
