நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு செயற்படுவதற்காக ஒரே மேடையில் அணிதிரண்டுள்ளன. இது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை ஆறு கட்சிகளினதும் தலைவர்கள் இன்று மதியம் கொழும்பு - பம்பலப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஒரே மேசையிலிருந்து வெளியிட்டனர்.
இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பி., அமீர் அலி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., அதன் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி., இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஜீவன் தொண்டமான் எம்.பி., தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மற்றும் அதன் உபதலைவர் சுரேந்திரன் குருசாமி ஆகியோர் ஒரே மேடையில் இருந்து இந்த அறிவிப்பை இன்று விடுத்தனர்.
இதனையொட்டி ஆறு கட்சிகளும் ஒன்று சேர்ந்து 'தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் பொதுவான விடயங்களில் இணைந்து செயற்பட பொது தளத்தை உருவாக்க இணக்கம்' என்ற தலைப்பில் இன்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:-
"இன்று சந்தித்த தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமது சமூகங்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவும், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், இணக்கப்பாட்டை உருவாக்கவும் பொதுவான தளமொன்றை உருவாக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தமது கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை தனித்தனியாக பேணுவதற்கும் முன்வைப்பதற்கும் சுதந்திரம் இருப்பதை ஏற்றுக்கொண்ட பிரதிநிதிகள், பொதுவான நலன்கள் காணப்படும் விடயங்களை அடையாளம் கண்டு, சாத்தியமான சந்தர்ப்பங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒரு பொறிமுறையாக இந்த தளம் அமையும் எனத் தெரிவித்தனர்.
