உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: கோட்டாபயவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடர் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் தன்னைக் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த எழுத்தாணை (Writ) மனுவின் மேலதிக விசாரணைகளை ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இம்மனு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தனது பதில் வாதங்களை முன்வைத்தார்.

முன்னதாக இவ்வழக்கில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், மனுதாரருக்கு எதிராக ஷானி அபேசேகர வஞ்சகமான முறையிலோ அல்லது பழிவாங்கும் நோக்கத்துடனோ செயற்பட்டார் என்பதை நிரூபிப்பதற்கு எந்தவொரு உறுதியான சாட்சியங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சட்டத்தரணிகளான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ஆகியோரும் இந்த வழக்கு விசாரணையைப் பார்வையிடுவதற்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இருதரப்பு வாதங்களையும் தொடர்ந்து, மனு தொடர்பிலான மேலதிக வாதப் பிரதிவாதங்களை முன்வைப்பதற்காக வழக்கின் விசாரணைகளை ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.