மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: 17 வயது சிறுவன் கைது

பாலியல் தொல்லை கொடுத்து மூதாட்டியை கொன்று செல்போன் திருடிய போதை சிறுவன்: கோவை பெண் கொலையில் திருப்பம்

கோவை பாப்பநாயக்கன் பாளையம் கருப்புக்கால் தோட்டத்தை சேர்ந்தவர் சாந்தி (58). கணவர் இறந்து விட்டார். ராஜா (35) என்கிற மகனும், அமுதா (30) என்ற மகளும் உள்ளனர். மகள் அமுதா திருமணமாகி பாலக்காட்டில் வசித்து வருகிறார். 

சாந்தி மகன் ராஜாவுடன் தங்கி டாக்டர் ஒருவர் வீட்டில் சமையல் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் சாந்தி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவலின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளியை தேடி வந்தனர்.

அதில் சந்தேக நபரை பிடித்ததில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், மூதாட்டி சாந்தியை கொலை செய்து தப்பியதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் கூறியதாவது: 17 வயது சிறுவன் கடந்த 12ம் தேதி மது போதையில் இருந்துள்ளார். திடீரென சாந்தி வீட்டிற்குள் புகுந்துள்ளார். அவரை கண்டு அதிர்ச்சி அடைந்த சாந்தி சத்தம் போட்டுள்ளார். இதனால் பயந்து போன சிறுவன் மரக்கட்டையை எடுத்து சாந்தியை பலமாக தாக்கி உள்ளார்.

அதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் போதையில் இருந்த சிறுவன் சாந்திக்கு பாலியல் தொல்லை கொடுத்து, வீட்டில் இருந்த ஒரு பேக்,செல்போனை திருடிக்கொண்டு தப்பி சென்றார். சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் அறிவியல் ஆதாரங்கள் அடிப்படையில் சிறுவன் சிக்கி கொண்டார். அவர் திருடி சென்ற செல்போனை எங்கோ வீசி விட்டார். அதனை தேடி வருகிறோம். 

கைது செய்யப்பட்ட சிறுவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.