முதலாவது மகப்பேறுக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியிருந்த நிலையில், பிறக்காத தனது பிஞ்சுக் குழந்தையுடன் தாயும் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் வாத்துவ பகுதியில் பதிவாகியுள்ளது.
வாத்துவையைச் சேர்ந்த 34 வயதான கே. திலானி பெர்னாண்டோ என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குறித்த பெண்ணுக்கு கடந்த 24ஆம் திகதி லேசான காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டதன் மூலம் காய்ச்சல் தணிந்துள்ளது.
எனினும், மலச்சிக்கல் உபாதை காரணமாகவே அவர் தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆரம்பம் முதலே குறித்த தனியார் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையைப் பிரசவிப்பதற்கான பரிசோதனைகளின் போதே அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும், குறித்த தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இடவசதி இல்லாத காரணத்தினால், உறவினர்கள் அவரை அரச மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், நிலைமை மிகவும் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், கடந்த 28ஆம் திகதி குழந்தையும், 29ஆம் திகதி மாலையில் தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இறப்பு தொடர்பில் திறந்த முடிவு வழங்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்பதற்கு முன்னர் அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தமை இரத்தப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
