தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மனைவி கத்திக்குத்துக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று(26.08.2026) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கணவன் - மனைவி இருவரும் சில காலமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் ஒன்றிணைந்து வாழ முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, தங்களது இரண்டு பிள்ளைகளுடன் இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை கணவரால் கத்தியால் குத்தப்பட்டதில் இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் படுகாயமடைந்துள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து, படுகாயமடைந்த பெண் உடனடியாக தலைமன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தலைமன்னார் பியர் பகுதியைச் சேர்ந்த கோகுலன் சோனியா (28 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படும் 32 வயதுடைய கணவர், தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, உயிரிழந்த பெண்ணின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரிடம் தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
