நான்கு வயது சிறுமியை நடுவழியில் விட்டுச் சென்ற பெண்: காதலனுடன் கைது

 கண்டி - வத்தேகம பகுதியில் நேற்று (13) நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைதான பெண் சிறுமியின் தாய் எனவும், ஆண் தாயின் காதலன் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி - வத்தேகம நகரில், நான்கு வயது சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்ற பெண் ஒருவர், அந்த சிறுமியை நடுவழியில் விட்டுச் சென்றுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

வத்தேகம நகருக்கு நேற்று காலை சுமார் 7.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் சென்ற பெண் ஒருவர், உடன் அழைத்து வந்த நான்கு வயது சிறுமியை அங்கேயே இறக்கிவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுமி தனியாக நிற்பதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள், உடனடியாக வத்தேகம காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துச் சிறுமியைப் பாதுகாப்பாகக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து குறித்த சிறுமி கண்டி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார்.

மீட்கப்பட்ட சிறுமி தமிழ் மொழியில் பேசுகின்ற நிலையில், அவரால், பெற்றோரின் விபரங்களையோ அல்லது தான் வசிக்கும் இடத்தையோ தெளிவாகக் கூறமுடியவில்லை.

அதேநேரம், அவரை ஏற்றி வந்ததாக கூறப்படும் முச்சக்கர வண்டியின் பதிவு எண் தெளிவாகத் தெரியாத காரணத்தினால், வத்தேகம மற்றும் அதனைச் அண்மித்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமராக்களின் காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு அந்த முச்சக்கர வண்டியையும், சிறுமியை விட்டுச் சென்ற பெண்ணையும் அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.