பற்றைக்காட்டில் ஆண் ஒருவரின் உடல் மீட்பு: மன்னார், பேசாலையில் பதற்றம்

  மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேசாலை 8 ஆம் வட்டாரம் பகுதியில் காணப்பட்ட பற்றைக்காட்டு பகுதியில் இருந்து நேறு வெள்ளிக்கிழமை மதியம் ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த அப்பகுதி மக்கள்  உடனடியாக கிராம சேவையாளர் ஊடாக பேசாலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.

இதையடுத்து பேசாலை பொலிஸார் அந்தப் பகுதிக்குச் சென்றனர்.

விசாரணைகளின் போது சடலமாக மீட்கப்பட்ட நபர் பேசாலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த லோரன்ஸ் மோரிஸ் (  வயது-41 ) என அடையாளம் காணப்பட்டார்.

இந்த நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்று கூறப்பட்டது. மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வரும் அவரின் வீடு அவர் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ளமை தெரிய வந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த குற்றத்தடுப்புத் தடயவியல்  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

 உயிரிழந்த நபரின்  தொலைபேசி தொடர்புகள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு பின்னர் கிடைக்கவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சடலத்தை மீட்ட பேசாலை பொலிஸார் இந்த நபரின் மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.