டொராண்டோவின் மேற்கு பகுதியில் கடந்த மாதம் பெண் பாதசாரி ஒருவரை வாகனத்தால் மோதி, படுகாயமடையச் செய்துவிட்டு தப்பிச் சென்ற குற்றச்சாட்டில் தேடப்பட்ட ஓட்டுநர், பொலிஸில் சரணடைந்தமையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
டொராண்டோ பொலிஸார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதனைத் தெரிவித்தனர்.
கடந்த ஓகஸ்ட் 26 ஆம் திகதி இரவு 8.30 மணிக்குப் பிறகு, Lansdowne Avenue மற்றும் Brandon Avenue பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது.
34 வயதுடைய பெண் ஒருவர், போக்குவரத்து 'சிக்னல்' கொண்ட பாதசாரிகள் கடக்கும் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அதிக வேகத்தில் வந்த 5 கதவுகளைக் கொண்ட வெள்ளை நிற ஹேட்ச்பேக் கார் அவரை மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் பெண் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார் என பொலிஸார் கூறினர். அந்த ஹேட்ச்பேக் கார் சில நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 52 வயதுடைய டொராண்டோவைச் சேர்ந்த Joao Cabral பொலிஸில் சரணடைந்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது உடல் காயம் ஏற்படுத்திய விபத்து இடம்பெற்ற இடத்தில் நிறுத்தாமல் சென்றமை மற்றும் நீதிக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
