காருக்குள் இளைஞனின் மோசமான செயல்: பொலிஸார் அதிரடி நடவடிக்கை

 


கனடாவின் பிராம்ப்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கத்திக்குத்து, வீடு புகுந்து தாக்குதல் மற்றும் கார் பறிப்பு முயற்சிகள் தொடர்பாக 27 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


Clockwork Drive மற்றும் Creditview Road பகுதியில் காருக்குள் உரிமையாளர் அமர்ந்திருந்தபோது, சந்தேகநபர் அவரது காரை பறிக்க முயன்றார் என கூறப்படுகிறது.


இதன்போது அவர் அந்த நபரை கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து கால்நடையாக தப்பிச் சென்றார் என பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், சந்தேகநபர் அருகிலிருந்த வீடு ஒன்றுக்குச் சென்று, முன்கதவை உதைத்து உடைத்து உள்ளே நுழைந்தார் என பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர்.


வீட்டுக்குள் நுழைந்த அவர், வாகனத்தின் சாவியை கேட்டுள்ளார் எனவும் ஆனால் சாவியைப் பெற முடியாததால் அங்கிருந்து வெளியேறியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.


தொடர்ந்து அந்தப் பகுதியில் மேலும் இரண்டு வாகனங்களை பறிக்க முயன்றார் என்றும் அந்த முயற்சிகளும் தோல்வியடைந்தன என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவங்களில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


சந்தேகநபரை அடையாளம் கண்ட பொலிஸார், கடந்த திங்கட்கிழமை பிராம்ப்டனில் உள்ள ஒரு முகவரியில் தேடுதல் உத்தரவை நிறைவேற்றினர். அதன் பின்னர் பிராம்ப்டனைச் சேர்ந்த Lovepreet Mann (வயது 27) கைது செய்யப்பட்டார்.


அவருக்கு எதிராக கடுமையான தாக்குதல், ஆபத்தான ஆயுதம் வைத்திருந்தல்/பயன்படுத்தல், மிரட்டல் விடுத்த மற்றும் கொள்ளை தொடர்பான 3 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.