அந்தமானில் தாழமுக்க: இலங்கைக்கு ஏற்பட்ட பாரிய ஆபத்து

 


அந்தமான் தீவுகள் மற்றும் வடக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் பலநாள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மீன்பிடிப் படகுகள், பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படும் அபாயம் காரணமாக உடனடியாக அப்பகுதியிலிருந்து விலகுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


இலங்கைக்கு கிழக்கே ஆழ்கடல் பகுதியில், குறிப்பாக அந்தமான் தீவுகளைச் சுற்றியுள்ள பகுதியில் தாழமுக்கப் பகுதி உருவாகியுள்ளதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.


இந்தத் தாழமுக்க முறைமை படிப்படியாக வலுப்பெற்று இந்தியாவை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதன் தாக்கம் மேலும் சில நாள்களுக்கு நீடிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மேற்படி கடற்பரப்புகளில் உள்ள மீன்பிடிப் படகுகள் தாழமுக்க மண்டலத்திலிருந்து விலகி, தெற்கு திசையில் இலங்கையை நோக்கி அல்லது பாதுகாப்பான வேறு கடற்பரப்புகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.


பலநாள் மீன்பிடிப் படகுகள் சில இன்னும் மேற்படி கடற்பரப்பில் இயங்கி வருகின்றன எனவும் கடல் நிலைமைகள் மோசமடையும் நிலையில் தொடர்ந்து மீன்பிடியில் ஈடுபடுவது படகுகளுக்கும் அதிலுள்ள மீனவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கஹவத்த எச்சரித்துள்ளார்.


இலங்கையைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சிறிய அளவிலான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களும் கடலுக்குச் செல்வதற்கு முன்னர் தினசரி கடல் நிலைமைகள் மற்றும் காற்றின் வேகத்தை கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


நாடு முழுவதும் மீன்பிடி நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கான எந்தவொரு தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும், நிலைமைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மேலும், மீனவர்கள் வானிலை மற்றும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுகின்றமையுடன், கடலுக்குச் செல்லும்போதும், மீன்பிடி நடவடிக்கைகளின்போதும், கரைக்குத் திரும்பும்போதும் உயிர்காக்கும் அங்கிகளை  அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.