அனோஜன் தொடர்பில் அநுர அரசு வெளியிட்ட தகவல்

 

பிளவுபடாத வெளிவிவகாரக் கொள்கையை முன்னிலைப்படுத்திச் சகல நாடுகளுடனும் இணக்கமாகச் செயற்படுகின்றோம். சிறந்த வெளிவிவகாரக் கொள்கையின் முன்னேற்றத்தினால்தான் மரண தண்டனையிலிருந்து அனோஜன் பாதுகாக்கப்பட்டார் என்று வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(23.11.2026) நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் உரையாற்றுகையில், "கடந்த காலங்களில் இலங்கை குறித்துச் சர்வதேச மட்டத்தில் கரும்புள்ளியே காணப்பட்டது.

ஆட்சியாளர்களினதும், அவர்களது குடும்பத்தாரினதும் சட்டவிரோதச் செயற்பாடுகளினால் நாட்டில் காட்டுச் சட்டங்களே செயற்படுத்தப்பட்டன.

தற்போது அவ்வாறான நிலைமை கிடையாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். இலங்கை ஜனநாயகம் மற்றும் சட்டவாட்சிக் கோட்பாட்டை முன்னிலைப்படுத்தும் ஒரு நாடு என்று சர்வதேச மட்டத்தில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்தவுடன் குறுகிய காலத்தில் இராஜதந்திர ரீதியில் மாற்றமடையும் உலகத்துக்கு ஏற்றால் போன்று எமது தொடர்புகளை நாங்கள் பலப்படுத்தியுள்ளோம்.

வெளிவிவகார அமைச்சு என்பது இராஜதந்திர நடவடிக்கைகளை மட்டும் முன்னெடுக்கும் அமைச்சு அல்ல. வெளிநாட்டுக் கொள்கையில் இராஜதந்திரத்தையும் கடந்து எமது நாட்டுப் பொருளாதாரம், வர்த்தகம், கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட சகல துறைகளும் உள்ளடங்கும் வகையில் அவற்றின் நலன்புரிகள் மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்தும் அமைச்சாகும். குறுகிய காலத்தில் பல்வேறு இராஜதந்திர வெற்றிகளைப் பெற்றுக்கொண்டுள்ளோம்.

2024ஆம் ஆண்டில் இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து சில நெருக்கடிகள் காணப்பட்டன. சுற்றுலாத்துறை மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவிருந்தது.

குறிப்பாக, அறுகம்பே பகுதியில் சம்பவமொன்று நடக்கவிருந்தது. அப்போது உடனடியாகச் செயற்பட்டு அந்த அழிவைத் தடுத்தோம்.

அதேபோன்று அமெரிக்க ஜனாதிபதி உலக நாடுகளுக்கு வரிகளை விதித்தபோது, இராஜதந்திர ரீதியில் செயற்பட்டு 44 வீதமாக விதிக்கப்பட்ட வரியை 10 வீதமாகக் குறைத்து வெற்றியடைந்தோம்.

இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளைப் பேணி நிறுத்தப்பட்டிருந்த புதிய திட்டங்களை நாங்கள் மீள ஆரம்பித்தோம். அந்தத் திட்டங்கள் இப்போது வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த பாதாள உலகக் குழுத் தலைவர்கள் இப்போது நாட்டிற்கு அழைத்து வரப்படுகின்றனர். இராஜதந்திர நடவடிக்கைகளின் பெறுபேறாகவே இவை சாத்தியமாகின்றன.

அண்மையில் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் சிவராசாவை அதிலிருந்து மீட்க முடியுமென்று எவரும் நினைத்திருக்கவில்லை. ஆனால், இராஜதந்திரத் தொடர்புகள் மற்றும் சட்டத்தரணிகளின் தலையீடுகள் மூலம் நான்கரை மாதங்களில் அவரை மரண தண்டனையிலிருந்து மீட்க முடியுமாக இருந்தது.

இந்த விடயத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் உள்ளிட்ட ஐ.நா. சபையின் சகல அதிகாரிகளுக்கும் நன்றியைக் கூறிக் கொள்கின்றோம். அவர்களின் தரப்பிலிருந்து தேவையான தலையீடுகளைச் செய்திருந்தனர். இதனால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு விசேட நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.