சர்வதேச அரங்கில் புதிய மைல்கல்! வாகனக் கையாளுகையில் புதிய சாதனை படைத்த இலங்கை!

 


ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் ஊடாக இதுவரை கையாளப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 50 இலட்சம் என்ற வரலாற்றுச மைல்கல்லை எட்டியுள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நிர்வாகம் அறிவித்துள்ளது.

வாகன கையாளுகை மற்றும் களஞ்சியப்படுத்தல் கொள்ளளவை மேலும் அதிகரிக்கும் நோக்கில், பிரத்தியேகமான வாகனக் கப்பல் இறங்குதுறை ஒன்றையும் புதிய வாகனத் தரிப்பிட வளாகம் ஒன்றையும் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய உள்கட்டமைப்பு, துறைமுகத்தின் செயல்பாட்டுத்திறனை மேம்படுத்துவதோடு, சர்வதேச வாகன போக்குவரத்து நிறுவனங்களின் அதிகரித்து வரும் தேவைகளையும் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், 2026 ஜூலை மாதத்தில் மட்டும் 104,620 வாகனங்கள் கையாளப்பட்டு, ஒரே மாதத்தில் அதிகபட்ச வாகனச் செயல்பாடுகளை இத்துறைமுகம் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அத்துடன், கடந்த மே மாதம் முதல் 'CASCADIA' மற்றும் 'UGR' ஆகிய நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய வாகனப் போக்குவரத்துச் சேவைகள் மூலம் துறைமுகத்தின் சர்வதேச கப்பல் வலையமைப்பு மேலும் விரிவடைந்துள்ளது.

ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிற்கு இடையேயான சர்வதேசப் போக்குவரத்திற்கான ஒரு முக்கிய சரக்கு மாற்று மையமாக ஹம்பாந்தோட்டா துறைமுகத்தை மேலும் மேம்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் சர்வதேச துறைமுக நிர்வாகம் அறிவித்துள்ளது.