திருமணத்திற்கு தயாரான பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த எதிர்பாராத சம்பவம்!



கண்டியில் தனது வருங்கால மனைவியுடன் ‘ப்ரீ வெட்டிங்’ புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்த வேளையில், முழு தாடியுடன் காவல்துறை சீருடையில் நடமாடிய நபர் கண்டி தலைமையகப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி, யட்டிநுவர வீதியில் முழு தாடியுடன் போக்குவரத்துப் காவல்துறை சீருடையில் நபர் ஒருவர் நடமாடுவதாகக் கிடைத்த தகவலையடுத்துப் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த கண்டி தலைமையகப் காவல்துறை பரிசோதகர் ரசிக்க சம்பத், சந்தேகநபரைக் கைது செய்தார். எனினும், பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கைது செய்யப்பட்டவர் சேவையில் உள்ள காவல்துறை உத்தியோகத்தர் என்பது தெரியவந்துள்ளது.

அவர் தலங்கம காவல்துறை நிலையத்திற்கு இணைக்கப்பட்டுக் கடமையாற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளில், இந்து மதத்தைச் சேர்ந்த குறித்த கான்ஸ்டபிளுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், இந்து சமயச் சம்பிரதாயங்களுக்கு அமையத் திருமணத்திற்கு முன்னர் தாடி வளர்ப்பதற்குப் காவல்துறை மா அதிபரிடம் அனுமதி பெற்றிருந்தமை தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவர் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, திருமணத்திற்காகத் தாடி வளர்ப்பதற்குக் குறித்த கான்ஸ்டபிளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதிலும், அதற்காகப் காவல்துறை சீருடையை அணிவதற்கு அவருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை எனக் கண்டியின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் வலியுறுத்தினார். மேலும், இச்சம்பவம் தொடர்பாகக் குறித்த கான்ஸ்டபிளுக்கு எதிராகத் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் அந்தச் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.