பொதுமக்களுக்கு பொலிஸாரினால் வழங்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ஒலி ஒளிபரப்பு அனுமதிக் கட்டணமாக முன்னர் ஒரு மணித்தியாலத்திற்கு வசூலிக்கப்பட்ட 300 ரூபா தற்போதைய சுற்றறிக்கைக்கமைவாக 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனை பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.
இச் சேவை கட்டணங்களை வசூலிப்பது தொடர்பாக தற்போது நடைமுறையிலுள்ள 2023.06.02 திகதியிடப்பட்ட பொலிஸ் மாஅதிபரின் சுற்றறிக்கை எண். 2749/2023 (நிதி சுற்றறிக்கை 04/2023) இரத்து செய்யப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. முன்னர் எந்த கட்டணமும் அறவிடப்படாமல், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் உள்ளூர் நோக்கங்களுக்காக மட்டும் வழங்கப்படும் பொலிஸ் அறிக்கைக்கு 300 ரூபா வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதேபோன்று பொலிஸ் மோப்ப நாய்க்காக ஒன்றரை மணித்தியால காலத்திற்கு உட்பட்ட மற்றும் எடுத்துச் செல்லக்கூடிய தூரத்தை தீர்மானிக்கும் கால்நடை மருத்துவரின் பரிந்துரைக்கு உட்பட்ட வகையிலும் பாடசாலை கண்காட்சிகளுக்காக உத்தியோகபூர்வ மோப்ப நாய்களை வழங்குவதற்கான கட்டணம் அறவிடுவது அல்லது அறவிடுதலை தவிர்ப்பது தொடர்பில் பொலிஸ் மாஅதிபரின் அனுமதிக்கு உட்பட்டவகையில் முன்னைய நடைமுறைக்கு அமைவாக அறவிடப்பட்ட 3000 ரூபா தற்போது 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு குதிரைக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு 6,000 ரூபாவாக அறவிடப்பட்ட கட்டணம், புதிய சுற்றறிக்கைக்கமைய முப்பதாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு வாகனத்தை இழுத்துச் செல்வதற்கான கட்டணம் 600 ரூபாவிலிருந்து ஐயாயிரம் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு கைரேகை அறிக்கைக்கு வசூலிக்கப்படும் கட்டணம் 150 ரூபாவிலிருந்து 500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
நீர் மூழ்குதல் உபகரணங்களுக்காக அறவிடப்படும் கட்டணம் 2,400 ரூபாவிலிருந்து 4,000 ரூபாவாகவும், உயிர்காக்கும் மற்றும் மயக்கும் உபகரணங்களுக்கான 1,200 ரூபா கட்டணம் 5,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.