தற்போது இந்தியாவில் கொவிட்-19 வழக்குகள் அதிகரித்து வருகின்றன.
தரவுகளின் படி மகாராஷ்டிராவில் அதிக அளவிலான கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. இது தவிர கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், டெல்லி, அரியானா, ராஜஸ்தான், சிக்கிம் போன்ற பகுதிகளிலும் கொவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. மிகவும் பெரிய அளவில் கொரோனா வழக்குகள் பதிவாகாவிட்டாலும், நாளுக்கு நாள் கோவிட் வழக்குகள் அதிகரித்தவாறு தான் உள்ளன.
இதைப் பார்க்கும் போது, எங்கு கொவிட்-19 மீண்டும் வந்துவிட்டதோ என்ற அச்சம் எழுகிறது. இந்த கொவிட்-19 மீண்டும் வந்துவிட்டதா, இது பெரும் சேதத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் விரிவாக கூறியுள்ளார்.
அது என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். அதில் அவர் கூறியதாவது, " சீனாவில் 2019 ஆம் ஆண்டுகளின் இறுதியில் கண்டறியப்பட்டு பிறகு உலகம் முழுவதும் பரவிய நாவல் கொரோனா வைரஸ் - 2019 (nCoV-2019) பிறகு சார்ஸ்-கோவி-2 (SARS-CoV2) என்று பெயரிடப்பட்டது. மனிதர்களிடம் அதுவரை பரவியிராத புதிய வைரஸாக இருந்தமையாலும் கூடவே எளிதில் பரவும் தன்மையும் தீவிர நோய் ஏற்படுத்தும் தன்மையும் இருந்தமையால் உலகை அச்சுறுத்தும் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டது. ஜனவரி 30, 2020 முதல் மே 5, 2023 வரை கொரோனா பெருந்தொற்று நிலையில் இருந்தது. இதற்கிடையே நமது நாட்டில் இரண்டு முக்கிய கொரோனா அலைகளை சந்தித்து பல்லாயிரம் இன்னுயிர்களை இழந்தது என்றும் நினைவுகளை விட்டு நீங்காது. இப்போது நிகழ் காலத்துக்கு வருவோம் 2020, 2021 ஆகிய காலங்களில் பெருத்த சேதங்களை நமக்கு வழங்கி வந்த கொரோனா வைரஸ், பிறகு தொற்று பெற்றவர்களிடம் இருந்த எதிர்ப்பு சக்தி + தடுப்பூசிகள் மூலம் பெற்ற எதிர்ப்பு சக்தி ஆகியவற்றின் மூலம் கொரோனா வைரஸுக்கு எதிரான கூட்டு எதிர்ப்பு சக்தியைப் பெற்றோம். இதன் காரணமாக 2022 ஆம் ஆண்டு நாம் சந்தித்த மூன்றாம் அலை - முதல் இரண்டு அலைகளைப் போல சேதங்களை ஏற்படுத்தாமல் அமைதியாகக் கடந்து சென்றது. அதற்குப் பிறகு 2023 ஆண்டு முதல் தற்போது வரை ஆறு முதல் ஒன்பது மாதங்களுக்கு ஒருமுறை கொரோனா வைரஸின் புதிய உருமாற்ற திரிபுகள் நம்மிடையே சிற்றலைகளாகப் பரவி தொற்றை ஏற்படுத்தி ஏற்படுத்திக் கடந்து செல்கின்றன. அப்படிப் பார்த்தால் 2022 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை கடந்த மூன்றரை ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஏழு முதல் அதிகபட்சம் பத்து கொரோனா சிற்றலைகளையாவது நம் நாடு சந்தித்திருக்கிறது. எனினும் அந்த அலைகளால் நம்மிடையே முதல் இரண்டு அலைகளைப் போன்ற அச்சுறுத்தலை ஏற்படுத்த இயலவில்லை. இதற்குக் காரணம் கொரோனாவுடன் நாம் எப்படி சேர்ந்து கூட்டாக வாழப் பழகிக் கொண்டோமோ, அதே போல கொரோனா வைரஸும் நம்மிடையே சேர்ந்து நேக்கு போக்குடன் வாழப் பழகிவிட்டது. அதாவது எப்படி வருடா வருடம் சீசனல் ஜூரத்தை உண்டாக்கும் ஃப்ளூ வைரஸ் வந்து செல்கிறதோ, அதே போன்றதொரு நிலையை கொரோனா வைரஸும் தன்னகத்தே ஏற்படுத்திக் கொண்டது. இப்போது கொரோனா வைரஸ் பேண்டமிக் எனும் பெருந்தொற்று உண்டாக்கி, அவ்வப்போது பேரலைகளாக வந்து சுருட்டி வாரக்கணக்கில் கொண்டு செல்லும் நிலையில் இல்லை. மாறாக எண்டமிக் (ENDEMIC) எனும் எப்போதும் மக்களிடையே கூடி வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையை அடைந்து விட்டது. இவ்வாறு எண்டமிக் நிலையை அடைந்த சுவாசப் பாதை வழியாகப் பரவும தொற்று வைரஸ்கள் அவ்வப்போதுகுறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மக்களிடையே அந்த வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி குன்றும் போதும் வைரஸ்கள் பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலை ( மக்கள் நெருக்கடி/ குளிர் காலம் ) ஆகியவை வரும் போது குறிப்பிட்ட நேரத்தில் பலருக்கும் பரவி சீசனல் ஜூரத்தை ஏற்படுத்தி பிறகு விலகும். அது போன்றே தற்போது ஹாங் காங் , சிங்கப்பூர் , தாய்லாந்து , சீனா ஆகிய ஆசிய தெற்காசிய நாடுகளில் கொரோனா தொற்று சற்று அதிகரித்துக் காணப்படுகிறது. எனினும் மருத்துவமனை உள்தங்கும் படியான தீவிர தொற்றோ மரணங்களோ அதிகரிக்கவில்லை என்பதைப் பதிவு செய்கிறேன். தற்போது ஆசியாவில் பரவி வரும் கொரோனா வைரஸின் திரிபு ஓமைக்ரான் வம்சாவளியின் BA.2.86 குடும்பத்தைச் சேர்ந்த JN.1 வகையாகும். இந்த வகை இந்தியாவில் 2023 ஆகஸ்ட் தொட்டு கண்டறியப்பட்டு வருகிறது. எனவே நம்மில் பலரும் இந்த வகை உருமாற்றத்துக்கு ஏற்கனவே பழகியிருக்க வாய்ப்பு அதிகம். தற்போது வரை இந்தியாவில் ஜேஎன்.1 வகை கொரோனா உருமாற்றத்தால் அச்சம் அடைய வைக்கும் தொற்று நிலைகளை உண்டாக்க இயலவில்லை என்பது திண்ணம். உலக சுகாதார நிறுவனம் இந்த ஜேஎன்.1 வகை உருமாற்றத்தை "கவனிக்கத்தக்க உருமாற்றம்" (VARIANT OF INTEREST) என்ற அளவிலேயே வைத்துள்ளது. "அச்சுறுத்தக்கூடிய உருமாற்றம் (VARIANT OF CONCERN) என்ற அளவுக்கு உயர்த்தவில்லை. 2023 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டும் இன்று வரை இந்த உருமாற்றம் அச்சுறுத்தக்கூடிய அளவில் பிரச்சனைகளை உருவாக்கவில்லை என்பதே இதற்குக் காரணமாக இருக்கக் கூடும். கொரோனா தொற்று கண்டறியும் பரிசோதனையை நாம் சுவாசப்பாதை தொற்றுடன் இருப்பவர்களுக்கு எடுக்கும் போது கொரோனா பாசிடிவ் என்று வருவதற்கு வாய்ப்பு அதிகம். எனவே பரிசோதனை அதிகமாகச் செய்தால் கொரோனா தொற்று கண்டறியப்படுவதும் அதிகம் தான் ஆகும். அதற்காக நாம் பீதியடையத் தேவையில்லை. சேலத்தில் வழக்கமாக பொது சுகாதாரத் துறையினர் - நோய் கண்காணிப்புக்காக செய்யும் பரிசோதனைகளில் கொரோனா தொற்று பாசிடிவ் என்று வந்ததை பெரிய செய்தியாக வெளிவந்து பீதியைக் கிளப்பி இருக்கிறது. மற்றபடி இது ஒரு வழக்கமான நோய் கண்காணிப்பு நிகழ்வே ஆகும். தாய்லாந்து, சிங்கப்பூர், சீனாவில் தொற்று கண்டறியும் பரிசோதனை அதிகமாகச் செய்வதால் அங்கு தொற்று அதிகம் கண்டறியப்படுகிறது. எனினும் மருத்துவமனை அட்மிஷன் மற்றும் மரணங்கள் அச்சுறுத்தும் வகையில் இல்லை. எனவே தெற்காசிய கொரோனா தொற்று அதிகரிப்புக்கு நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இவ்வளவு விஷயங்கள் சாதகமாக இருப்பினும், நாம் இது குறித்து இன்னும் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. கொவிட்-19 வகைத் தொற்றுக்கான அறிகுறிகள் - காய்ச்சல் - உடல் வலி - மூக்கடைப்பு - மூக்கு ஒழுகுதல் - வறட்டு இருமல் - தொண்டை வலி - நுகர்தல்/ சுவைத்தல் திறனிழப்பு - வயிற்றுப் போக்கு பெரும்பாலும் இளம் வயதினரிடையே தொற்றானது கண்டறியப்பட்டு வருகிறது. சுவாசப் பாதை வைரஸ் தொற்றுகள் பொதுவாகவே ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறார் சிறுமியர், பல்வேறு இணை நோய் கொண்டோர், எதிர்ப்பு சக்தி குன்றியோர், முதியோர்களுக்கு சற்று தீவிரமாக வெளிப்படும். எனவே மேற்கூறிய அறிகுறிகள் இருப்பின் இவர்கள் அனைவருமே எச்சரிக்கையுடன் முறையான மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். - மூன்று நாட்களுக்கு மேல் தீவிரமான காய்ச்சல் - மூச்சு விடுவதில் சிரமம் - மூச்சுத் திணறல் - நெஞ்சு வலி - நெஞ்சு பகுதியில் அழுத்தம் - நின்றால் நடந்தால் தலைசுற்றல், போன்றவை நியூமோனியாவின் அறிகுறிகளாக இருக்கலாம். இந்நிலையில் உடனே மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற வேண்டும். முடிவுரை பெரும்பான்மையினருக்கு உயிருக்கு ஆபத்தற்ற சாதாரண தொற்றாகக் கடந்து செல்கிறது என்பதால், நாம் இந்த கொரோனா சிற்றலையைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டியதில்லை. * எனினும் முதியோர், குழந்தைகள், இணை நோய்கள் கொண்டவர்கள், எதிர்ப்பு சக்தி குன்றியவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். * கூட்டமான பகுதிகளிலும் மருத்துவமனைகளிலும் முகக்கவசம் அணிவதை வழக்கமாகக் கொள்ளலாம். * கைகளை அனைவருமே அவ்வப்போது சோப்பு போட்டுக் கழுவுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். * அபாய அறிகுறிகளை ஆரம்பத்திலேயே இனங்கண்டு சிகிச்சையை விரைவில் வழங்க வேண்டும். கொரோனா பீதியின்றி அதே சமயம் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருப்போம். இதுவும் கடந்து போகும்." என்று டொக்டர் கூறினார்.