இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோலஞ்சேரி வரிகோலி மட்டக்குழி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி சந்தியா. இவர்களது மகள் கல்யாணி (வயது3).
சிறுமி கல்யாணி மட்டக்குழி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்று வந்தாள். நேற்று (19) அங்கன்வாடி மையத்துக்கு சென்றிருந்த சிறுமியை, தாய் சந்தியா அழைத்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வரும் வழியில் தனது மகள் திடீரென காணாமல் போய் விட்டதாக சந்தியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிந்து சிறுமி கல்யாணியை தேடினர். மேலும் தேடுதல் பணி துரிதப்படுத்தப்பட்டது. மேலும் சிறுமியை அழைத்துவந்த இடம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து சிறுமியின் தாயிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக சில தகவல்களை தெரிவித்தாக தெரிகிறது. இதனால் சிறுமியின் தாய் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இறுதியில் சிறுமியை சாலக்குடி ஆற்றுக்கு அருகே விட்டுவிட்டு வந்ததாக சந்தியா தெரிவித்துள்ளார்.
இதனால் சிறுமியை ஆற்றுக்குள் வீசியிருக்கலாம் என்று கருதி ஆற்றுக்குள் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 8 மணி நேர தேடு தலுக்கு பிறகு ஆற்றில் மூழ்கிக்கிடந்த சிறுமி கல்யாணியின் உடல் மீட்கப்பட்டது.
இதையடுத்து சிறுமியின் தாய் சந்தியாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் தான் சிறுமியை ஆற்றுக்குள் வீசியது தெரியவந்தது. சந்தியாவும், அவரது கணவரும் குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில் தான் அங்கன்வாடி மையத்தில் இருந்து மகளை அழைத்து வந்த சந்தியா, ஆற்றுக்குள் மகளை வீசியிருக்கிறார். மேலும் தனது மகள் மாயமாகிவிட்டதாக நாடகமாடியிருக்கிறார். கணவர் மீதான ஆத்திரத்தில் அவர் தனது குழந்தையை ஆற்றில் வீசியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாய் சந்தியாவிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்தபிறகே, தனது மகளை சந்தியா எதற்காக ஆற்றில் வீசி கொன்றார்? என்பது தெரிய வரும். விசாரணைக்கு பின் அவர் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.