இந்தியாவில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குஞ்சாம்பட்டி அருகே மதுரை - தேனி மெயின்ரோட்டை கடக்க முயன்ற ஒரு குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மீது அந்த வழியாக அசுர வேகத்தில் வந்த கார் பயங்கரமாக மோதியது. இதில் அனைவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.
உசிலம்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பின்னர் ஊர் திரும்பியபோது இந்த கோர விபத்தில் சிக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பேச்சியம்மன் கோவில்பட்டியை சேர்ந்த ஜெயபாண்டி என்பவருடைய மனைவி பாண்டிச்செல்வி(வயது 28), குஞ்சாம்பட்டியை சேர்ந்த ஜெயமணியின் தாயார் லட்சுமி (55), மனைவி ஜோதிகா (20), இவருடைய ஆண் குழந்தை பிரகலாதன்(3) ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்,
படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ஜெயபாண்டி, கருப்பாயி, ஜெயமணியின் பெண் குழந்தை கவியாழினி(1) ஆகியோரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
விபத்திற்கு காரணமாக கார் ஓட்டுனர் காரை நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பிவுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சம்பந்தப்பட்ட காரை ஓட்டிவந்தது, பூச்சிப்பட்டியை சேர்ந்த ஆனந்த் என தெரியவந்துள்ளது. கார் ஓட்டுனர் ஆனந்தை பொலிஸார் தேடி வருகின்றனர்.