கொத்மலை, ரம்பொட, கெரண்டிஎல்ல பகுதிகளில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த 40க்கும் மேற்பட்டோர் இன்னும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.இதற்கிடையில், காயமடைந்தவர்களின் நலனை விசாரிக்க பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (11) கம்பளை வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.
கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று, நுவரெலியா-கம்பொல பிரதான வீதியில் உள்ள கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் 22 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் கொத்மலை பிராந்திய வைத்தியசாலையில் வௌிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அனைத்து நோயாளிகளும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஐந்து நோயாளிகள் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அதே நேரத்தில் 22 நோயாளிகள் கம்பளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது நுவரெலியா பொது வைத்தியசாலையில் 15 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கவலைக்கிடமாக உள்ள மேலும் சில நோயாளர்கள் பேராதனை மற்றும் கண்டி வைத்தியசாலைகளிலும் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், விபத்துக்குள்ளான பேருந்திற்கு சொந்தமான கதிர்காமம் டிப்போவின் முகாமையாளர் துசித சமிந்த, விபத்து குறித்து தனது கருத்துக்களை வௌியிட்டார்.
"நீண்ட தூர சேவை பேருந்துகள், முறையாக கட்டமைக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே இயக்கப்படுகின்றன."
மேலும், இந்தப் பயணத்திற்கு மிகவும் அனுபவம் வாய்ந்த சாரதி ஒருவரே நியமிக்கப்பட்டிருந்தார்.
அவர் மாலை 4 மணிக்கு சரியான நேரத்தில் வேலைக்கு வந்து இரவு 10.00 மணிக்கு வேலையைத் தொடங்குவார். "பகலில் சேவை இல்லை." என்றார்.