கல்கிஸ்ஸை கடற்கரை வீதிக்கு திரும்பும் சந்தியில் 19 வயது இளைஞர் ஒருவர் மீது இன்று (05) காலை 6.35 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இளைஞர் சுடப்படுவதைக் காட்டும் மற்றொரு சி.சி.டி.வி காட்சியும் வெளியாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் அந்த இளைஞனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்ற நிலையில், காயமடைந்த நபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.அந்த இளைஞன் நகர சபை ஊழியர் என்பதுடன், கடற்கரை வீதிக்கு திரும்பும் சந்திப்பில் ஒரு கிளை வீதியில் அவர் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, இரண்டு சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்து துப்பாக்கிச் சூடு நடத்திய விதம் இதற்கு முன்னர் வௌியான சி.சி.டி.வி, கெமராவில் பதிவாகியிருந்தது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் பிரதான வீதியை நோக்கி ஓடுவதையும், அங்கு இரண்டு சந்தேக நபர்கள் மீண்டும் அவரைத் துரத்திச் சென்று சுட்டுக் கொன்ற விதமும் மற்றொரு சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
தெஹிவளை, ஓபன் பிளேஸைச் சேர்ந்த இந்த இளைஞனின் கொலைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
அவரது தாயார் தற்போது போதைப்பொருள் விற்பனை குற்றச்சாட்டில் சிறையில் உள்ளதுடன், இறந்த இளைஞன் 2023ஆம் ஆண்டு போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் போதைப்பொருள் கடத்தல்காரரான படோவிட்ட அசங்கவின் உறவினர் என்று கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல் மாகாணத்தின் தெற்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பனவின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது.