டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக நடவடிக்கைகளை விரைவில் மீள ஆரம்பிப்பதற்குத் தேவையான நடைமுறை மூலதனக் கடன்களை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய, கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி முதல் மூன்று அரச வங்கிகள் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், தனியார் வங்கிகள் உட்பட மேலும் 13 வங்கிகள் இந்தக் கடன்களை வழங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட விருப்பம் தெரிவித்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி நிதியியல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். 'டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 0% வட்டிக்கு வங்கிகளுக்குப் பணம் வழங்கப்படுவதாகவும், வங்கிகள் மூலம் 3% வட்டி வீதத்தின் கீழ் 25 மில்லியன் ரூபா வரை கடன் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். அதற்கமைய, 2026 ஆம் ஆண்டிற்காக இதற்காக 10,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை மீள வலுப்படுத்துவதற்கான கடன் வசதியின் கீழ், 25 மில்லியன் ரூபா வரை 5% வட்டிக்கு அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊடாகக் கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியும். 2026 ஆம் ஆண்டில் இதற்காக 25,000 மில்லியன் ரூபா ஒதுப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். இதனிடையே, விவசாய சமூகத்தின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கும், மொத்த தேசிய உற்பத்தியில் விவசாயத்துறையின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் கடன் வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் பெப்ரவரி இரண்டாவது வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் கீழ் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பரிந்துரையின் பேரில் 50 இலட்சம் ரூபா கடன் வழங்கப்படவுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் இதற்காக 800 மில்லியன் ரூபா ஒதுப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
