பண்டாரவளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சாரதி ஒருவர் மீது குடிபோதையில் பயணி ஒருவர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அப்பகுதியில் இன்று (17) பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆம் திகதி பண்டாரவளையில் இருந்து பல்லேவெல நோக்கிச் சென்ற கடைசி இரவு பஸ்ஸில் குடிபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்ட நபரை பஸ் சாரதி எச்சரித்துள்ளார்.
குறித்த நபர், பஸ் சாரதியை அச்சுறுத்திவிட்டு இறங்கியுள்ளதாகவும், சாரதி வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த பஸ் சாரதி தற்போது பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பண்டாரவளை பொலிஸார் சந்தேக நபரை பல்லேவெல பகுதியில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் குறித்த நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரினாலும் பண்டாரவளை டிப்போவாலும் தனக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்று தாக்கப்பட்ட சாரதி தெரிவித்துள்ளார்.
எனவே, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இந்த வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.