இந்தியாவில் கேரளா இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே கொன்னத்தடி ஊராட்சி பணிக்கன்குடி கொம்பொடிஞ்சால் பகுதியில் வீட்டிற்குள் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உடல் கருகி பலியாகினர்.
சம்பவத்தில் 44 வயதான தாய், அவரது 10 மற்றும் 4 வயதான மகன்களும், 70 வயதான பாட்டியும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.நேற்று முன்தினம் இரவு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், அயலவர்கள் காயமடைந்த சிறுவன் ஒருவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனைய மூன்று பேரின் உடல்களும் கருகிய நிலையில் நேற்று மீட்கப்பட்டன.
இடுக்கி தடயவியல்துறையினர் நேற்று சம்பவ இடத்தில் சோதனையிட்டனர். அதில் மின் கசிவு மூலம் மே 9 இரவில் தீப்பற்றியதாக முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மோப்ப நாய் மூலம் சோதனை நடந்தது.
கொம்பொடிஞ்சால் பகுதியில் மலை மீது வீடு தனியாக உள்ளதால் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் உடனடியாக வெளியுலகிற்கு தெரியாமல் தாமதமாக நேற்று முன்தினம் மாலை தான் தெரியவந்தது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.