இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயநகரம் கன்டோன்மென்ட் துவாரபுடியில் உள்ள மகளிர் மன்ற அலுவலகத்தில் கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அதே பகுதியை சேர்ந்த உதய் (வயது 8), சாருமதி (8), சரிஷ்மா (6), மானஸ்வி (6) ஆகிய சிறுவர்கள் 4 பேரும் வீதியில் விளையாடிக் கொண்டு இருந்தனர்.
அப்போது மகளிர் மன்ற அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த காரில் ஏறி விளையாடினர்.
கார் கதவை உள்பக்கமாக மூடிக்கொண்டனர். காருக்குள் காற்று போகாததால் 4 பேருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. குழந்தைகள் கார் கதவை திறக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் கதவை திறக்க முடியவில்லை.
சிறுவர், சிறுமிகள் காருக்குள் இருந்து கதறி அழுதனர். கார் கதவு மூடப்பட்டு இருந்ததால் அவர்களின் சத்தம் வெளியில் யாருக்கும் கேட்கவில்லை.
சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு 4 பேரும் காருக்குள்ளேயே இறந்து விட்டனர்.
விளையாடச் சென்ற சிறுவர், சிறுமிகள் நீண்ட நேரமாக வீட்டிற்கு திரும்பாததால் அவர்களது பெற்றோர்கள் தேடிச் சென்றனர். பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் குழந்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் மகளிர் மன்ற அலுவலகத்தில் இருந்த ஊழியர் காரை பார்த்தபோது அதில் 4 பேர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அருகில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் கார் கதவை திறந்து காரில் இருந்து மீட்டனர்.
சிறுவர்களை பரிசோதித்து பார்த்த போது மூச்சு திணறி இறந்தது தெரியவந்தது. இறந்தவர்களில் சாருமதி, சரிஷ்மா இருவரும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து 4 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.