திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் பாலியல் தொல்லை புகார் அளிக்கச் சென்ற ஐந்து மாத கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் கொடூரமாக தாக்கியதாக வெளியான காணொளி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, காவல்துறையின் மீது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த காணொளியை வெளியிட்டு, “குற்றவாளிகளிடம் கையூட்டு பெற்று, பாதிக்கப்பட்டவர்களை தாக்கும் அளவிற்கு காவல்துறைக்கு துணிச்சல் எங்கிருந்து வந்தது? கர்ப்பிணி பெண்ணை தாக்கும் அளவிற்கு மனிதாபிமானம் மலிந்துவிட்டதா? காவல்துறையே பாதிக்கப்பட்டவர்களை தாக்கினால், திராவிட மாடல் ஆட்சியில் நீதி எங்கு கேட்பது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்தி, “காவல்துறையின் மாண்பை கேள்விக்குறியாக்கும் இந்த அராஜகத்தில் உடனடி விசாரணை நடத்தி, குற்றவாளியான காவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் காவல்துறையின் செயல்பாடு மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.