சிவகங்கை திருபுவனத்தில் போலீசாரால் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படும் அஜித்குமார் உடலில் 18 இடங்களில் கடும் காயங்கள் இருந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம், போலீஸ் விசாரணையின் போது நடந்த சித்திரவதை குறித்த புகார்களுக்கு பலம் சேர்க்கும் வகையில் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 29 வயதான கோவில் காவலாளி அஜித்குமார், காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக அவரது உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது, அந்த பரிசோதனையின் முதற்கட்ட முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பிரேத பரிசோதனை முடிவுகள்
பிரேத பரிசோதனை முடிவுகள் குறைந்தது 18 இடங்களில் வெளிப்புற காயங்கள் உடலில் இருப்பதை கண்டறிந்துள்ளன. இந்த காயங்கள் மண்டையோட்டிலிருந்து தொடங்கி, கை, முதுகு, கால் என உடல் முழுவதும் பரவியுள்ளன. மேலும், உயிருடன் இருக்கும் போதே மண்டை ஓடு உடைந்திருக்க வாய்ப்புள்ளது. ஒட்டுப்புற உறுப்புகளிலும் பலவிதமான காயங்கள் மற்றும் ரத்த கசிவுகள் காணப்பட்டுள்ளன.
இந்த காயங்கள் மரணத்துக்கு நேரடியாக காரணமாக இருக்கக்கூடிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கழுத்து பகுதியில் ஏற்பட்ட தீவிர காயம் உயிரிழப்புக்கு நேரடி காரணமாக இருக்கலாம் என்பது போன்று அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
மேலும், உளவியல் அடிப்படையில் ஏற்பட்ட அதிர்ச்சி, அழுத்தம் மற்றும் உட்புற இரத்த கசிவுகள் போன்றவை மரணத்திற்கு வழிவகுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
வழக்கமாக ஒரு பிரேத பரிசோதனை ஒன்று முதல் இரண்டு மணி நேரம் மட்டுமே நடக்கும் நிலையில், அஜித்குமார் மீது நடந்த பிரேத பரிசோதனை ஐந்து மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றிருக்கிறது. இது உடலில் ஒரு அசாதாரணமான அளவில் தாக்கங்கள் மற்றும் காயங்கள் இருந்ததை உறுதி செய்யப்படுகிறது.