நாடு முழுவதும் இடம்பெற்ற சில வீதி விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் நேற்றும் (27) இன்றும் (28) இடம்பெற்ற சில விபத்துக்களில், அனைத்துமே மோட்டார் சைக்கிள் விபத்துக்களாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.அதன்படி, நேற்று காலை நாரம்மல பொலிஸ் பிரிவில் கடஹபொல - கடுபொத வீதியில் உள்ள சியம்பலாகஸ்கொட்டுவ பிரதேசத்தில், கட்டுபொதவிலிருந்து கடஹபொல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து, கட்டுபொத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பன்வில பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும், மீட்டியாகொட - கஹவ வீதியில் மீட்டியாகொடவிலிருந்து கஹவ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மீட்டியாகொட பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர்.
கொழும்பு - கண்டி வீதியில் மாஹேன பகுதியில் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பெண் பாதசாரி பலத்த காயமடைந்து வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அங்கு பெண் பாதசாரி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் கண்டி பகுதியைச் சேர்ந்த 72 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று (28) அதிகாலை பொத்துவில் வீதியில் அக்கரப்பத்திலிருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
துவிச்சக்கரவண்டியில் சென்றவர் மற்றும் பயணி பலத்த காயங்களுடன் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.