சாரதி அனுமதிப்பத்திரங்களின் கையிருப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளின் பற்றாக்குறை காரணமாக கடந்த காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
அதனை நிவர்த்தி செய்யும் வகையில் சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை அச்சிடுவதற்கான அட்டைகள் சுமார் பத்து இலட்சம் அளவில் அண்மைக்காலத்தில் அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
அவற்றில் சுமார் ஒன்பது இலட்சம் அட்டைகள் தற்போதைக்கு அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு இலட்சம் அளவிலான அட்டைகளே கையிருப்பில் உள்ளன.
இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் விநியோகத்தில் மீண்டும் சிக்கல் ஏற்படலாம் என்று அச்சம் தோன்றியுள்ளது.
எனினும் அரசாங்கம் தற்போதைக்கு எட்டு லட்சம் அட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அதன் காரணமாக சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் விநியோகத்தில் தடங்கல் ஏற்படாது என்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.