இந்தியாவின் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையம் பொன்முத்து நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அஸ்விதா (19). மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இப்பகுதியில் வேலைபார்த்த தனியார் நிறுவன ஊழியர் பிரவீனுக்கும் (23) அஸ்விதாவுக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் பிரவீன் உடுமலை ரோடு பகுதியில் உள்ள அண்ணாமலை நகரில் குடியேறினார்.
எனினும் காதலை தொடர்ந்தனர். இவர்கள் காதலை ஏற்றுக்கொண்ட பெற்றோர் திருமணம் குறித்து பேசத்தொடங்கினர். ஆனால் திடீர் திருப்பமாக பிரவீனை திருமணம் செய்ய அஸ்விதா மறுத்துள்ளார்.
இதனால் தன்னை மறந்துவிட்டு வேறு வேறு நபரை அவர் காதலிப்பதாக பிரவீனுக்கு சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் நேற்று (02) அஸ்விதாவை சந்திக்க வடுகபாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு பிரவீன் சென்றார். அங்கு யாரும் இல்லாததை அறிந்து, திருமணத்திற்கு சம்மதிக்கும்படி கூறியுள்ளார். அவர் மறுக்கவே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பிரவீன், கத்தியால் அஸ்விதாவை சரமாரியாக குத்திவிட்டு தப்பினார். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் வந்து அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதனிடையே பிரவீன் தாலுகாபொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.