அமெரிக்காவில்(us) பாரிய விமான விபத்து ஏற்படவிருந்த நிலையில் விமானியின் சாதுர்யத்தால் விமானம் தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அனைவரும் உயிர்தப்பிய சம்வமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அமெரிக்க நாடுகளில் ஒன்றான நெவாடாவில் உள்ள லொஸ் வெகாஸ் விமான நிலையத்தில் இருந்து வட கரோலினா மாகாணத்தில் உள்ள சார்லட் டக்ளஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு, 153 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் அமெரிக்கன் ஏர்லைன் விமானம் புறப்பட்டது. வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நிமிடங்களிலேயே இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு, புகை வெளியேறியது.
இதனை உணர்ந்த விமானி, சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை மீண்டும் லொஸ் வெகாஸ் விமான நிலையத்திலேயே தரையிறக்கினார். இதனால், பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பின்னர், அவர்கள் விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இது குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 'விமானத்தில் கோளாறு ஏற்பட்ட போதிலும் பயணிகளை பத்திரமாக அழைத்து வந்த எங்கள் விமானக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பயணிகளின் திட்டமிட்ட பயணத்தை விரைந்து செயல்படுத்துவோம்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, விமானம் வானில் பறக்க தொடங்கும் போது புகை வெளியேறிய காணொளி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.